செவ்வாய், 16 டிசம்பர், 2008

பெண் நெசவாளியின் வாழ்கைக்கவிதை


மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.

உடுத்த ரெண்டு சேலைக்கு மேல் இல்லாமல்,
ஊருக்கு புடவை வழங்குவதற்கு நெய்து கொண்டு இருக்கிறாள்.

காதல் வாழ்வும் இவளுக்கு உண்டு,
கணவனும் கடும் நெசவாள உழைப்பாளிதான்

பரம்பரை சண்டைகளில், பாதி நேரம் கழிய
மீத நேரம் காதலின் ஊடல்.

கல்யாணம் கைதட்டி நிறைவேறியது*.
ஊரைவிட்டு ஓடிப்போனதால்.

காதல் கூடிய தெம்போ அல்லது குடும்ப நிலயோ
எதுவோ விரைவாக சேலையை நெய்து கொண்டு இருக்கிறாள்.

வாங்கும் சம்பளம் திங்களன்றே பங்கிட்டு கொடுத்தபின்
மீத, பற்றாக்குறைக்கு மறுபடியும் கைமாத்து வாங்குவாள்.

மருத்துவ செலவுக்கு நிலமெல்லாம் விற்றது போக
மிஞ்சியது ஏதும் இல்லை தரித்திரம் தவிர.

வறுமைக்கு வாக்கபட்டதாலோ என்னவோ
கஷ்டம் இவள் மீது ஒரு தலை காதலுடன்
எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

நல்லவேளை கணவன் குடிகாரனில்லை
பின் எப்படி மாண்டான் சிறு நீராக நோயால்?

இளம் விதவை, ஊரின் மைனர்மாருக்கெல்லாம் கொண்டாட்டம்
இங்கேயோ சொந்தங்களுக்கு திண்டாட்டம்

என்ன செய்வது வீட்டு ஆளுகளை எதுத்து கல்யாணம் செஞ்சாலும்
அவ நம்ம வீட்டு புள்ள இல்லையா?

அதுக்க்காகவா? இல்ல இவ இப்படி இருந்தா கேட்டு
குடும்பமானம் போயிடும்னா ? எப்படியோ வீட்டுக்குள்ள சேத்துகிட்டாங்க.

ஆனா பிழைப்பு மட்டும் அதே தான்,
மாரிமுத்து இப்பவும் மனசுக்குள்ள மஞ்சத்துல இருக்கான்

பலகையை மாற்றி போட்டு நெய்ய ஆரம்பிக்கையில்
மாறிப்போன தன் வாழ்க்கை இங்கே நினைவில்லை

வேற எடத்துல கவனம் இருந்தா, சீலையில் தத்தியல் (குறைபாடு) ஏறிவிடும்
குறை இல்லாம நெஞ்சதனால தான் குறைஞ்சு போச்சா வாழ்க்கை தரம்.

அவர் முகம் பாக்க குழந்தையும் இல்லை
அவள் வாழ்கையை ரசிக்க இந்த உலகில் எதுவும் இல்லை.

வெள்ளைசேலைக்கும், திருநீருக்கும் என்றுமே உலகில் பஞ்சமில்லை
இவள் ஆடை நெய்த போதும் யாரும் சகுனம் பார்ப்பதில்லை




( *யாரும் குடும்பத்தை மீறி மணக்க நேரின் மேளம் இன்றி மிக எளிமையாக கைதாளத்துடன், மிட்டாய் வழங்கப்பட்டு முடியம் கல்யாணம்)

சனி, 13 டிசம்பர், 2008

சுப்புவின் கண்ணீர்


அன்றுதன் சித்ராவிற்கு கல்யாணம். அவளது தந்தை தனது பூர்வீக சொத்தான தனது பாட்டனார் கட்டிய வீட்டை யும், அதனை ஒட்டி இருந்த சென்ட் நிலத்தையும் விற்று நடத்திக்கொண்டிருந்தார். தனது மூத்தமகன் ராமன் இல்லாத குறையை இளையவன் கணேசன் நிவர்த்திசெய்திருந்தான் . தன் மனைவி சொல் கேட்டுக்கொண்டு தன் தந்தையை கவனியாமல் விட்ட குறையை இதில் தீர்த்துவிடலாம் என வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான்.

ராமன் என்பவன் தான் முதன் முதலாய் அந்த பரம்பரையிலே முதன் முதலாய் பட்ட படிப்பு படித்தவன். படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என பல வேலைகளை தூக்கி எறிந்தவன், பின் நண்பர்கள் உதவிஉடன் துபாய் சென்று தன் படிப்புக்கு சம்பந்தமான வேலை பார்க்க சென்று இருக்கிறான்.

தன் தந்தை மீதோ அல்லது தாய் மீதோ எதுவும் பாசம் வைத்து கிடையாது, ஆனால் தன் தங்கை மீது உயிரை வைத்திருந்தான். தன் கவிதை வாசத்தை முதலின் நுகர்ந்து பார்த்த பின் தன் அவனுக்கு கவிதை எழுதியதே தகும். தன் காதலின் இருப்பை கண்டறிந்தவள் தன் தங்கயே ஆதலால் பல சந்தர்ப்பங்களில் அவள் பேச்சை இவன் மீறிய சரித்திரம் இல்லை. ஆனால் தன் தந்தை அல்லது தாய் பேச்சை கேட்ட சரித்திரம் இல்லை.

பக்கத்து வீட்டு மகா மீது அளவு கடந்த காதல். இதில் அவளுக்கும் உடன்பாடுதான் இருந்தாலும் காதலை தெரிவிக்க பயம். என்ன இருந்தாலும் அவள் கிராமத்து மயில் அல்லவா? . இந்த விஷயம் மகாவின் அப்பாவிற்கு தெரிந்து சுப்புவை பார்த்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்டு விட்டார். இதை பார்த்துக்கொண்டிருந்த இளைய மகன் கணேசன் அந்த மனிதரை அரிவாள் எடுத்து வெட்ட போய்விட்டான். சுப்பு அந்த நேரத்திலும் நிதானமாய் செயல் பட்டு தன் பிள்ளைக்கு அறிவுரை கூறி இருந்தார். இதெல்லாம் ராம் இல்லாதபோது நடந்த நிகழ்வுகள்.

என்னதான் சுப்புவை மதியாது நடந்தாலும் மற்றொருவர் தன் தந்தையை வசைபாடியதை அறிந்து மகாவின் அப்பாவிடம் சென்று சுப்புவின் மீது வீசிய அதே வார்த்தைகளை இரட்டிப்பாக அளித்துக்கொண்டிருந்தான். எல்லாம் உன்னால் வந்த வினை என மகாவை அவள் அப்பா உள்ளே இழுத்துப்போய் கதவை மூடிக்கொண்டார்.

ராமும் அவளும் பார்த்து அப்போதுதான் கடைசி முறை. பின் அவள் தன் சொந்த தாய் மாமனுக்கு பரிசம் போடப்பட்டு பின் கல்யாணதேதி வரையில் ராமனை நினைத்து காத்திருந்து அரளி விதைக்கு அரசி ஆனாள். இறபுக்குகூட ராமன் வரவில்லை. ஏன் எனில் சண்டயிட்ட மறுநாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ரயில்ஏறி வடக்கே சென்று விட்டதாய் தகவல்.

ஒரு வருடத்திற்கு முன் தன் துபாயில் இருப்பதை உறுதிபடுத்தினான். கண் மூடி கண் திறப்பதற்கு முன் வருடங்கள் ஓடிவிட்டதை கண்ணீர் மட்டுமே சாட்சியம் வரும். தன் தங்கை கல்யாணத்திற்கு அவசியம் வருவேன் என ஒரு வருடத்திற்கு முன் கடிதம் வாயிலாக சொன்னான்.

கல்யாணம் முடிந்த பின்னும் அந்த ராமன் வந்த பாடில்லை . ஒரு லெட்டர் மட்டும் சுப்புவின் பெயரிட்டு from : ராம் என இருந்தது. சுப்பு அந்த லெட்டர் எழுத்துக்களை பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார்.

"
அன்புள்ள அப்பா

நலம் என சொல்லக்கூட நலமில்லாமல் இருக்கிறேன். ஒட்டகம் மேய்ப்பவன் என தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் எனவே தான் நல்ல வேலையில் இருப்பதை பொய் கூறி இருந்தேன், ஓட்டகபண்ணை தான் எனது அலுவலகம். ஒட்டகம் எனது அலுவல்.

கடைசி வெள்ளிக்கிழமையில் எனது கொடுமைக்கார முர்தலளியை நானும் எனது சக வும் கொன்றுவிட்டு தலைமறைவை வாழ்ந்து வருகிறோம், இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்கையில் நான் இருப்பேனா இல்லையா என்பதே ஒரு கேள்விக்குறிதான் .

ஏன் தங்கைக்கு ஏன் இனிய திருமண வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

உங்கள் மகன் ராம் "

ரேடியோ வில் இந்திய கொலைகாரன் ராமும் ஆனந் கூட்டாளி ரமேசும் துபாயில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஒலித்துக்கொண்டிருந்தது. சுப்புவும் அவர் மகளும் கதறி அழுது கொண்டு இருந்தார்கள்

கவிதை 1


மெல்லினமே உன்
இடையினத்தை
காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்

*****************************************************

உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன்
பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின்
ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?

**********************************************************

ஹைக்கூ 1


மீசை இருந்தாலும்
ஆண்மகன் இல்லை
கரப்பன்
பூச்சி

******************************************************

பச்சையம்
இழந்த இலை
இன்னும் உதிராமல்
இளம் விதவை


*******************************************************

என்ன
முயன்றும் தோல்விதான்
இந்த
தேனீக்கு
பிளாஸ்டிக் ரோஜா

********************************************************


காய்த்த
மரம் கல்லடிபடும்
என்னை
ஏன் அடிக்கிறார்கள்?
யோசனையுடன்
ஓடும் நாய்

*********************************************************

பனித்துளியை தாங்கும் என் ரோஜா


பனித்துளியை இலையில் தாங்கும் புல் போ
தண்ணீர் குடத்தை இடையில் தாங்கி வருகிறாய்.

கால்களின்
விலங்குபோல வெள்ளி கொலுசு
ஆணவமாக சத்தமிட்டு உலக அமைதியை கலைக்கின்றன.

நானும்
நீயும் நேருக்கு நேராக நீயும் நானும் நோக்குகையில் நான் உன் கண்ணையும் நீ என் கண்ணையும் பார்வையால் தாக்க ஆரம்பிக்கிறோம்

நீ
ஒரு வழியில் விலக, அனிச்சை யாய்என் பாதங்களும்
அதே
பாதையை தேர்ந்தெடுக்க

உடனே
மறு வழியில் உன் பாதம் பதிக்க,
நானும்
வேண்டுமென்றே என் கால்களை அதே வழியில் செலுத்த,

இக்கட்டு
உருவாக்க மவுனம் வழிய ஆரம்பிக்கிறது, நீயும் நானும் வேறு வழியின்றி மாற்று வழி தேர்ந்தெடுக்க

நீ
பாதையில் நடக்க ஆரம்பிக்க, என் நெஞ்சில் பூ பூக்க ஆரம்பிக்கிறது
சபிக்க ஆரம்பிக்கிறது உன் காலடி படாத மண் துகள்கள்.

மறு
படியும் வெற்று குடத்துடன் திரும்பி வருகிறாய்,
என்
பார்வை மறுபடியும் உன் கண் மேய,

நீயோ
என் உணர்வு தூண்ட , மண் பார்த்து நடக்கிறாய்,
நான்
உன் கால்விரல் தூசியை சபிக்கிறேன் என்னவளை அழுக்கக்கதே என,

ஒற்றை ரோஜா உன்னால் சூடப்படும் போது,
உலக
மலர்களெல்லாம் தான் மனஸ்தாபப்படும்.

அருகில்
வந்து என்னை பார்த்து முத்துக்களை சிரிப்புகளால் உதிர்க்கிறாய், இதற்க்காக எத்தனை தடவை வேண்டுமானால், கோமாளியாக மாறத்தயார்.

உன் சிரிப்புக்கு காரணம் நான் யோசித்து கொண்டு இருக்கின்றேன், பின்னால் வந்த உன்தந்தை என் கனவுலகை உடைத்து, என்னை உடைக்க வருவதை அறியாமல்.

வெள்ளி, 12 டிசம்பர், 2008

தொளசியோட கத

கிளிய வளர்த்து கேடு கெட்ட நாய்க்கு குடுத்த மாமன் சடையன் மவ கத தெரியுமா?


தொளசி கந்தனை மனசுல நெனச்சு எங்கினதும், கந்தனும் தொளசிய காதலித்தும்
யாருக்கும் தெரியாத ரகசியம் தான். தொளசி கொஞ்சம் படிச்சவ. அஞ்சான் கிளாசுன்ன சும்மா வா? நம்ம கந்தன் ஒரு மக்கு மவன். உனக்கெல்லாம் படிச்சா புள்ள எப்படிடா அமைஞ்சது என தலையை குடையாத நாள் இல்லை.

கரிச காட்டுல காதல் வளத்தாக, கெணத்து மேட்டுல தண்ணி எரைக்கிற மாதிரி காதல வளத்தாக. கல்ல காட்டுல கூட காத கதைய பேசுனாக. இருந்தாலும் யாருக்கும் கண்ணா உருத்தல என்ன ரெண்டு பெரும் தூரத்து சொந்தங்க . சின்ன வயசில இருந்தே ஒன்னா இருந்தவங்க இன்றதுனால யாருமே ஐய்யப்படலே.

யாரு கண்ணு பட்டுச்சோ கந்தனுக்கு சோதனைக்கு மேல சோதன. அவனோட அம்மா செத்த பின்னாடி நாயே கூட மதிக்கலே. ஊருலயே அவன் சாத்திலே கொறச்ச நிலம் வச்சு இருந்தது அவன் மட்டும் தான், சடையன் தொளசிக்கு மாப்பிள பாக்க பக்கத்து ஊருக்கு போயிருக்கும் போது, கந்தன் தொளசிய பாக்க வந்தான் இந்த நேரந்தான் நம்ம மூக்க பய வரணுமா? ஏற்கனவே கந்தனுக்கும் மூக்க பயலுக்கும் பங்காளி சண்ட.

சரியான சமயமா பாத்து வந்து இருக்கான், கந்த சடயன்ட்ட கோள்மூட்டி விட்டான் . கந்தனோட நல்ல நேரம் சடையன் நம்பல. அந்த பேச்சு அப்படியே போச்சு. இந்த விஷயம் ஊருக்குள்ள மெல்ல பரப்பி விட்டான் மூக்க பய. என்னத்த சொல்ல, யான வாய மூடினாலும் ஊர் வாய மூடமுடியாம போச்சு.

கந்தனும் தொளசியும் ஊரைவிட்டு ஊடிப்போகம இருக்கிறதுக்கு காவல போடற அளவுக்கு அந்த விஷயம் பொகஞ்சு போச்சு . ரெண்டு பேறும் ஒரே சாதி தான்,தூரத்து உறவுந்தான், பல வயசு பயலுவ தொளசிய ஒரு கண்ணு வச்சது தான் இதுக்கெல்லாம் காரணம் அப்படின்னு பின்னாடிதான் தெரிஞ்சது.

நேரடியா எல்லா பயலுவளும் கந்தனை மெரட்ட ஆரம்பிச்சிட்டாங்க, ஒருநா கை கலப்பாக ஆரம்பிச்சு அடிச்சு காயபோடற அளவுக்கு ஆகிப்போச்சு. தொளசி கந்த பாக்க அவன் வீட்டுக்கு வந்த போது சடையன் பாத்துபுட்டான். ஆனா தொளசி வீட்டுக்கு திரும்புன பெறகு அவல வீட்டுலையே வச்சு அடச்சுபோட்டான்.
அவளுக்கும் மொரபைய காத்த முத்துக்கும் அவசர கல்யாணத்தை பண்ணி வச்சுட்டான் சடையன். எதுத்து நிக்க தெம்பு இல்லாம அரளிவிதய அரச்சு முழுங்கிட்டான் கந்தன் .

கறந்து வச்ச பால கக்க தட்டி விட்ட மாறி ஆகிப்போச்சு தொளசி நெலமை. அவளும் யாரும் வீட்டுல நிம்மதியா இல்ல. ஒவ்வொரு வார்த்தையையும் சும்மா குத்தி காட்டித்தான் பேசுவான் நம்ம காத்த முத்து.
ஒரு நா ஏண்டி உன் வைத்து குள்ள வளர கொளந்த என்னோடதா ? கந்தநோடதா? அப்படின்னு கேட்டுட்டான்.

அருகமனையில சங்க அருக்கரமாதிரி இந்து அந்த கேள்வி. அவளும் நாண்டு கிட்டு செத்துப்போன. இப்ப சந்தோசமா சடையனுக்கு? யாராவது அவன் வீட்டுக்கு போனா ரெண்டு கிழி கிழுச்சுட்டு வாங்க. அவ எழவுக்கு கூட காத்த முத்து அழுவள, அடுத்த பொண்ணு கிடைக்கமய போயிருவா?

நித்தியமானவள்


உன்னிடம் சரணடிய வைத்து விட்டாய்,
இப்போது உன்னை விரும்புகின்றேன்.
நீயோ எப்போதும் என்னை விரும்பிக்கொண்டிருக்கிறாய்

வா வந்து விடு இரு வரும் தழுவிக்கொள்ளலம்,
யார் பார்த்தல் நமக்கென்ன?
கூச்சத்தை விட்டு விட்டேன்.

யார் என்னை சுற்றி இருப்போர்?
நான் இவர்களை நாடிய போது உதாசினபடுதியவர்கள் தானே இவர்கள்,
உன்னை நான் விரும்புவதை தடுக்க வந்த உறவினர்கள்.

என்னவள் கூட என்னை தீண்ட விரும்ப வில்லை - ஆனால்
நீ என்னை எப்போதும் அணைக்க துடித்துக்கொண்டு இருக்கின்றாய் .

யார் தடுத்தாலும் நான் உன்னை சேர்வதை தடுக்க இயலாது.
வரட்டும் நெஞ்சில் உறுதியுடன் தான் இருக்கின்றேன்.
நான் உன்னை இப்போது வெறுக்க வில்லை.

நான் காதலித்த பெண் கூட என்னை எப்போதுமே விரும்பியதில்லை
நீயோ எப்போது வந்தாலும், ஏற்று கொள்ள தயாராய் இருக்கிறாய்,

யாரவது உன்னை தடுத்தால்,
அவர்களை தண்டிக்க தயாராகத்தான் இருக்கிறேன்
வா சீக்கிரம், உன்னுடன் ஐக்கியமாகிறேன்,


உலகில் அதிகம் வெறுக்கப்படுவவள் நீதான் என்றாலும்
உன்னவர்களை அடைந்து விடுகிறாய் உன் காத்திருப்பால்.

யப்பா என்ன ஒரு மென்மை, என்ன வாசம்?
உன்னை போ யாருமே இவ்வளவு அழகை தழுவியது இல்லை
பூவாசம் நாசியை அடைக்கிறது

ஐயோ மகனே போயிட்டயே என் யார் யாரோ கத்திக்கொண்டு இருக்க
இந்த "என் உடல்" எனப்பட்ட வஸ்து அமைதியாய்
கல்லறைக்கு சென்று கொண்டிருந்தது.